1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான 111.54 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமாரவின் தங்கையான கம்பளை விதானகே டிலினி நில்மினி உட்பட மூவரையும் எதிர்வரும் 26ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
10 கிராம் 590 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதாவின் தங்கையை, கொழும்பு மாளிகாகந்த மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது, நேற்று புதன்கிழமை(21) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அவரை, தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என பொலிஸார் விடுத்து கோரிக்கையையடுத்து, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, வெலே சுதாவின் தங்கையான நில்மினி உட்பட மூன்று பேர், ஹெரோயின் போதைபொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று புதன்கிழமை(21) பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
சுமார், 111.54 கிராம் ஹெரோயினை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் பொரளையில் வைத்து கைது செய்யப்பட்டனர். பொரளை பிரதேசத்தில் சோதனை மேற்கொண்ட பொலிஸார், இரண்டு நபர்களை ஹெரோயினுடன் கைதுசெய்தனர்.
அதன்போது, வடிவேல்பிள்ளை தம்மிக என்பவர் 60.66 கிராம் ஹெரோயினுடனும் நிஷாந்த மாலக என்பவர் 40.336 கிராம் ஹெரோயினுடனும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, வெலே சுதாவின் தங்கையை 10.52 கிராம் ஹெரோயினுடன் கைது செய்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.