முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றும் இன்று மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே இவ்வாறு மஹிந்த, ஆணைக்குழு எதிரில் முன்னிலையாகவுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு விசாரணைகளுக்காக ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுயாதீன தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் அனுர சிறிவர்தன உள்ளிட்டவர்களும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரச்சாரத்திற்காக செய்த விளம்பரங்களுக்கான கட்டணங்கள் இன்னமும் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்,சுமார் 115 மில்லியன் ரூபா இவ்வாறு செலுத்தப்பட உள்ளதாகவும் பொது வேட்பாளராக போட்டியிட்ட இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பணம் பெற்றுக்கொண்டு விளம்பரம் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, விளம்பரம் செய்தமை குறித்த கட்டணங்களை தாம் செலுத்த முடியாது கட்சியிடம் அதனை அறவீடு செய்யுமாறும் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.