(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினம், வீதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதன் ஊடாக பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘தும்முல்லை வழக்கு ‘ என பரவலாக அறியப்படும் இந்த வழக்கு இன்று ( 30) விசாரணைக்கு வந்த போது, இதற்கான உத்தரவை கொழும்பு பிரதான நீதிவான் நனத்தன அமரசிங்க பிறப்பித்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி, அப்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராட் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தின் போது, தும்முல்லை பகுதியில் வீதியை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு பொய்யான தகவல்களை முன்வைத்து முறையற்ற விதத்தில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை, அதனை உடன் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் அவருக்கு இரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் முன்வைத்துள்ள மேன் முறையீட்டு கோரிக்கையை நாளை ( 31) பரிசீலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.