பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – காரணம் வெளியானது

பெஸ்டியன் மாவத்தை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – காரணம் வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (30) நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் வேதனப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளதாக அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதான முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அத்துடன், அவருடன் இருந்த மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர், நேற்று (30) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது உந்துருளியில் பயணித்த இருவரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு 07 பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய அவர்களுக்கு 3 மாதங்களுக்கான வேதனம் வழங்காமல் பணியிலிருந்து நிறுத்திய நிலையில், அதற்கு எதிராக அவர்கள் நட்டஈடு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தினால் அவர்களுக்கு எதிராக கருவாத் தோட்டம் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதோடு விருந்தகத்தின் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

எனினும் வேதனம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த நபரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.