(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
காணாமல் போன சிறுமியை 24 மணித்தியாலத்துக்குள் கல்முனை பொலிஸார் திங்கட்கிழமை (30) இரவு கண்டுபிடித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலை ஒன்றைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.
சம்பவ தினமான ஞாயிற்றுக்கிழமை (29) மாலை 2.30 மணியிலிருந்து குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பாடசாலையின் நிர்வாகத்தினர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். காணாமல் போன சிறுமி நிந்தவூரைச் சேர்ந்தவராகும்.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல் றபீக் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் வைத்து திங்கட்கிழமை (30) இரவு குறித்த சிறுமியை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுமி திங்கட்கிழமை(30) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
சிறுமி பொலிஸாருக்கு வழங்கி வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் குறித்த காப்பகத்திலிருந்து தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார்.