நிமலை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்குவதற்கு தொடர்ந்தும் இடைக்கால தடை!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது.
அதற்கமைய, நிமல் சிறிபால டி சில்வாவை நாளை மறுதினம் (22) வரை கட்சியில் அவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சராக பதவியேற்ற, தமது கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிவித்தது.
இந்நிலையில், அதற்கு எதிராக நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட நால்வரை பிரதிவாதிகளாக பெயரிட்டு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி, அவ்வழக்கை கடந்த 7 ஆம் திகதி ஆராய்ந்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம, மனுதாரரின் கோரிக்கைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் அவர் வகித்த பொறுப்பில் இருந்து அவரை நீக்கவோ, இடை நிறுத்தவோ தடை விதித்து இன்று (20) வரை இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பித்தார்.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்பட்ட நிலையில், குறித்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிமல் சிறிபால டி சில்வாவை மத்திய செயற்குழுவில் இருந்தும், நிறைவேற்றுக் குழுவிலிருந்தும், மாவட்ட தலைவர் பதவியிலிருந்தும், தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்குவது மற்றும் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கும் அது தொடர்பிலான தீர்மானங்களை எடுப்பதற்கும் இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.