சீனாவில் தொடரும் ‘தம்பதிக்கு ஒரு குழந்தை” கொள்கை

சீனாவின் ‘தம்பதிக்கு ஒரு குழந்தை” என்ற கொள்கை, தொடர வேண்டுமென , தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தக் கொள்கையானது தளர்த்தப்படுமென எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்த ஆளும் கம்யூனிசக் கட்சி, ஒரு தசாப்தத்துக்கும் மேலாக நடைமுறையில் காணப்படும் ‘ஒரு குழந்தை” கொள்கையைத் தளர்த்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

எனினும், அதுகுறித்தான சட்டம் நிறைவேற்றப்படும்வரை, எல்லாத் திணைக்களங்களும் பிரிவுகளும், குடித்தொகை மற்றும் குடும்பத் திட்டமிடல் சட்டங்களையும் நடைமுறைகளையும் அமுல்படுத்த வேண்டுமென தேசிய சுகாதார மற்றும் குடும்பத் திட்டமிடல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, தாங்கள் விரும்பியபடி எவரும் செயற்படக்கூடாது எனவும் அது எச்சரித்துள்ளது.

சீனாவின் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்ட ‘ஒரு குழந்தை” கொள்கை, சீனாவில் முதியோர்களின் சதவீதத்தை அதிகரித்துள்ளதாகக் கருதப்படும் நிலையிலேயே, அக்கொள்கையைத் தனர்த்துவது குறித்தான கருத்துப் பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.