சீனியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் – சீனி இறக்குமதியாளர்கள்

சீனியின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் – சீனி இறக்குமதியாளர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும் என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனி கிலோகிராம் ஒன்று தற்போது சந்தையில் 265 ரூபா முதல் 300 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்தியாவினால் சர்வதேச சந்தைக்கு சீனி உள்ளிட்ட மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டமை காரணமாகவே சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

யுக்ரேன் உள்ளிட்ட மேலும் சில நெருக்கடிகள் காரணமாக இந்தியாவினால் சீனி, தானியங்கள் உள்ளிட்ட சில பொருட்களின் இறக்குமதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பங்களாதேஷ், மியன்மார், மாலைத்தீவு உள்ளிட்ட நாடுகள் ராஜதந்திர ரீதியாக மேற்கொண்ட தலையீட்டு காரணமாக இறக்குமதி தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக தலையீடு செய்து சீனிக்கான இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

அத்தகைய நடவடிக்கை எடுக்காவிடின் சந்தையில் சீனிக்கான விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, சந்தையில் முட்டை 45 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இவ்வாறன பின்னணியில் தமது சங்கத்திடம் தேவையான அளவு முட்டை உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றை கொண்டு செல்ல முடியாததன் காரணமாக தாம் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.