வாகனங்களுக்கு லீசிங் கட்டுபவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்: சபையில் நாமல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த எரிபொருள் நெருக்கடி நிலையை வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்டிருக்கும் இந்த நிலையில், லீசிங் கொடுப்பனவுகளை கட்டுமாறு நிறுவனங்கள் வலியுறுத்தி வருவது பெரும் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆகவே,இந்த நிறுவனங்களுடன் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பேச்சுவார்த்தை நடத்தி வாகன உரிமையாளர்களுக்கு சலுகை பெற்றுக்கொடுக்க வேண்டும். என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
எரிபொருள் இல்லாமல் வாகனங்கள் வீதிகளில் ஓடவில்லை. வருவாய் இழந்து கிடக்கின்ற இந்த வாகனங்கள் லீசிங் கட்ட முடியாமல் இருக்கின்றது. இந்த நிலையில் அந்த வாகன உரிமையாளர்கள் லீசிங் கட்ட முடியாது. ஆகவே குறிப்பிட்ட நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சர்கள் லீசிங்,இந்த நெருக்கடி நிலை தீரும்வரை சலுகைக் காலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கண்டி பத்தேகம பிரதேசத்தில் லீசிங் நிறுவனமொன்று வாகனத்தை எடுத்துச் செல்லும் முன் வந்த பொழுது அதனை உரிமையாளர் தடுத்து இருக்கின்றார்.அதன்பின்பு அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார். மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
அதே நேரம், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடிநிலை இருந்தாலும், பொது போக்குவரத்தை சரியான முறையில் செயல்படுத்தும் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு தனது பாராட்டை தெரிவிப்பதாக அவர் கூறினார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுப் போக்குவரத்தை சுயமாக வழிநடத்தும் அமைச்சர் கஞ்சன,இந்த லீசிங் விடயத்திலும் கவனம் செலுத்துவதே மேலானது என்றும் அவர் தெரிவித்தார்.