சர்ச்சையின் பின்னர் பதவி விலகிய பெர்டினண்டோ மீண்டும் இன்று கோப் குழுவுக்கு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதன் பின்னர், பதவி விலகிய இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினண்டோ, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் இன்றைய தினம் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர் இன்று முற்பகல் 11 மணியளவில் அந்த குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின்போது, முன்னிலையாகி இருந்த இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ, மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழுத்தம் பிரயோகித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்திருந்ததன் பின்னர், இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர், கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
கோப் குழுவில் வினவப்பட்ட கேள்விகளால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தாம் இந்தியப் பிரதமர் தொடர்பான கருத்தை வெளியிட்டதாகவும், அதனை மீளப் பெறுவதாகவும் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினண்டோ குறித்த கடிதத்தில், சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த 11ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவரினால் கோப்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போது ஆராயப்பட்டிருந்தது.
முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோவை மீண்டும் குழுவின் முன்னிலையில் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு அன்றைய தினம் கோப் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கமைய, அவருடன் கலந்துரையாடி அதன் மூலம் குறித்த கடிதத்தின் உள்ளடக்கங்களை மீள்நிர்ணயம் செய்து அவர் கோரியிருந்த அவரது சாட்சியத்தின் ஒரு பகுதியை நீக்குவது தொடர்பான முடிவு இன்றைய தினம் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.