கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கிறோம்! -முருந்தெட்டுவே தேரர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கிறோம்.

பிற நாடுகளிடம் யாசகம் பெற்றாவது ஜனாதிபதி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் இல்லாவிடின் பதவி விலக வேண்டும். யார் ஜனாதிபதி, யார் பிரதமர் என்பது எமக்கு முக்கியமல்ல,மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் என அபயராம விஹாரையின் விஹாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விஹாரையில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சுதந்திரத்துக்குப் பின்னரான காலப் பகுதியில் இலங்கை மக்கள் என்றும் இல்லாதவாறு மிக மோசமான அவல நிலையினை தற்போது எதிர்கொண்டுள்ளார்கள்

.பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆடம்பர வாழ்க்கையை மக்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆடம்பர வாழ்க்கையல்ல தற்போது ஒருவேளை உணவை பெற்றுக்கொள்வது கூட பெரும் போராட்டமாக உள்ளது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கினோம் என்பது உண்மை, அதனை மறுக்கவில்லை. அதன் சாபத்தை தற்போது எதிர்கொள்கிறோம் என்றார்.