பாகிஸ்தான் வீரர்களை திட்டமிட்டு பழிவாங்குகிறது இந்தியா – சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் சயீத் அஜ்மல். தனது வலது கை ஆப்பிரேக் பந்து வீச்சால் எதிரணியை ஆட்டம் காண வைத்தவர். 38 வயதாகும் அஜ்மல், 2009-ம் ஆண்டு தனது 32-வது வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதில் இருந்து சிறப்பாக விளையாடிய அவர், இதுவரை 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் 10 முறை ஐந்து விக்கெட்டும், 4 முறை 10 விக்கெட்டும் அள்ளியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இவரது பந்துவீச்சுக்கு பெரிய சோதனை வந்தது. இவரது பந்து வீச்சு ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கு மேல் முட்டு வளைகிறது என்று புகார் எழுப்பப்பட்டது. அத்துடன் அவர் அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். அதன்பின் அணியில் அவர் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில், தனது பந்து வீச்சை குறைகூறுபவர்கள் இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை குறைகூற மறுக்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அஜ்மல் கூறுகையில், ‘‘ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோர் முறைகேடாக பந்து வீசுகிறார்கள். அவர்களுக்கு தண்டனை கொடுப்பதில்லை. ஏனென்றால். அவர்கள் இந்தியாவிற்காக விளையாடுகிறார்கள். இருவரும் நிச்சயமாக தங்களது கையை 15 டிகிரிக்கு மேல் வளைக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பந்து வீச்சு நடவடிக்கை முறையாக கவனிக்கப்படுவதில்லை. ஹர்பஜன் சிங் 660 பந்துகளை வீசினால் அனைத்தும் விதிமுறைக்கு மாறாக வீசியதாகும். அஸ்வின் சில சமயம் சரியாக வீசுகிறார். ஆனால், சில சமயம் கையை அதிகமாக வளைக்கிறார். ஆனால், இருவரும் சில வருடங்களாக இவ்வாறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை.

ஆனால், பிலால் ஆசிபை எடுத்துக்கொள்வோம், அவர் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியதும், அடுத்த போட்டியில் நடுவரின் புகாருக்கு ஆளாகிறார். பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக இது திட்டமிட்டு நடக்கிறது.

ஹர்பஜன் சிங் 400-க்கும் மேல் விக்கெட் வீழத்தியுள்ளார் என்றால், அனைத்தும் முறைகேடான பந்தில் எடுத்ததாகும். என்னை முறைகேடாக பந்து வீசுவதாக கூறுகிறார்கள். நல்லது. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், எனது மருத்துவ நிலை அப்படி. உலகத்தில் உள்ள எந்தவொரு டாக்டராலும் என்னுடைய இயற்கையான கை வளைவை சரிசெய்ய முடியாது. இருந்தாலும் என்னை பந்து வீச விடாமல் விலக்கி வைத்துள்ளார்கள்.

ஹர்பஜன் பந்தை டெஸ்டுக்கு உட்படுத்தினால் அவரது கை வளைவது தெரியும். அதேபோல் ஏராளமான பந்து வீச்சாளர்கள் அங்கு உள்ளனர். ஆனால், அவர்களுடைய பெயர்களை சொல்ல விரும்பவில்லை. ஆனால், பாகிஸ்தான் வீரர்களை மட்டும் ஏன் திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி’’ என்றார்