ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கப் போகும் ஐக்கிய மக்கள் சக்தி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஊரடங்குச் சட்டத்தையும் மீறி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் இணையுமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இன்றைய தினம் செய்தியாளர் வைத்திப்பில் வைத்து இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எமது கட்சியின் முழு இயந்திரமும் நாளை கொழும்பு வந்து ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருக்கும்.

நாம் கோட்டை புகையிரத நிலையத்தில் ஒன்றுகூடி, பின்னர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்வோம். அத்துடன் ஜனாதிபதி பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போரில் இணையுமாறு அனைத்து மக்களையும் நாங்கள் அழைக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மத்தும பண்டார கூறுகையில், உயர்மட்டத்தின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்று பாதுகாப்புப் படையினரையும், பொலிஸாரையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் இன்று தலைநகருக்கு வருவதை தடுக்கும் வகையில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துமாறு அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

நாசவேலையின் மூலம் புகையிரத போக்குவரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தோல்வியடைந்தவர் என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.