கோட்டாபய வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது : ஏ.எவ்.பி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்லும் முயற்சி, விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளின் எதிர்ப்பின் காரணமாக தடுக்கப்பட்டதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை இன்று (12) செய்தி வெளியிட்டுள்ளது.

“பொருளாதார நெருக்கடியினால் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக நடத்தப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டங்களையடுத்து, புதன்கிழமை தான் ராஜினாமா செய்தவாகவும் அமைதியான அதிகார பரிமாற்றத்துக்கான வழியை ஏற்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

73 வயதான ஜனாதிபதி கடந்த சனிக்கிழமை பல்லாயிரகணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்னால் அங்கிருந்து வெளியேறினார். அவர் துபாய்க்கு செல்ல விரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது கைது செய்யப்படுவதற்கு எதிரான விலக்குரிமையை அனுபவிக்கும் ராஜபக்ஷ, தடுத்து வைக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, ராஜினாமா செய்வதற்கு முன்னர் தான் வெளிநாடு சென்றுவிட வேண்டும் என அவர் விரும்புவதாக நம்பப்படுகிறது.

ஆனால், குடிவரவு அதிகாரிகள், விமான நிலையத்தின் விஐபி பகுதியில் அவரின் கடவுச்சீட்டில் முத்திரைகுத்துவதற்கு மறுத்தனர்.

ஆனால், பொதுமக்களுக்குரிய பகுதிக்கூடாக செல்லும்போது, விமான நிலையத்தின் ஏனைய பாவனையாளர்களால் தான் பழிவாங்கப்படக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு ஊடாக செல்வதற்கு அவர் மறுத்தார்.

ஜனாதிபதியும் அவரின் மனைவியும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லக்கூடிய 4 விமானங்களைத் தவறவிட்ட நிலையில், படைத்தளம்  ஒன்றில் இரவைக் கழித்தனர்” எனவும் ஏ.எவ்.பி. செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இளைய சகோதரர் பெசில் ராஜபக்வும் செவ்வாய்க்கிழமை காலை, இதேபோன்ற எதிர்ப்பின் காரணமாக துபாய் நோக்கி செல்வதற்கான எமிரேட்ஸ் விமானத்தை தவறவிட்டார் எனவும் ஏ.எவ்.பி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.