கண்ணீர் புகை வீச்சால் உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது…!

கண்ணீர் புகை வீச்சால் உயிரிழந்ததாக கூறப்படும் நபரின் மரணத்திற்கான காரணம் வெளியானது…!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் கடந்த (13) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகை பிரயோகத்தின் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞனின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, இரத்தக் குழாயில் அடைப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டமையே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நபர் பல்வேறு போதைப் பொருட்கள் (ஹெரோயின், ஐஸ்) மற்றும் மதுபானங்களுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தை அண்டிய பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இந்த நபர் நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மஹவ தலதாகம பிரதேசத்தில் வசித்து வந்த 26 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குறித்த நபர் கண்ணீர் புகைக்குண்டு வீச்சுக்கு உள்ளானதாகவும், பின்னர் அவரும் தொலைக்காட்சி கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.