இன்னும் சில நேரத்தில் , புதிய ஜனாதிபதி தெரிவு!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, வாக்கெடுப்பு இன்னும் சில மணித்தியாலங்களில் நடைபெறவுள்ளது.
இதற்காக, நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கு இடையே ஜனாதிபதி பதவிக்கான போட்டி நிலவுகிறது.
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி பதவிக்காக வேட்பாளராக முன்னிலையாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும், அவருக்கு ஆதரவளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்டோரும் கூட்டமைப்பின் கூட்டத்தில் நேற்றிரவு பங்கேற்று, முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
இதன்போது, சில வாக்குறுதிகளை வழங்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டு, டலஸ் அழகப்பெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆளுந்தரப்பு சுயாதீன உறுப்பினர்கள் குழவினரும், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிக்கவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.