போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு தயாராகும் ஜனாதிபதி ரணில்

போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு தயாராகும் ஜனாதிபதி ரணில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையின் நிறைவேற்ற அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக இன்று பதவிப்பிரமாணம் செய்ய இருக்கும் ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள், ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் வரை போராட்டத்தை தொடர போவதாக அறிவித்திருக்கின்றார்கள். அதே நேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் காலி முகத்திடல் போராட்டக்காரர்களோடு சிறு சிறு மோதல்களுக்கு தயாராகுவது போல் தெரிகிறது.

காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் எவரும் ஒன்று சேரக்கூடாது என்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோல, ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை ஆக்கிரமித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி எடுத்த கையோடு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதேவேளை, பாராளுமன்றத்தில் எட்டாவது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, உடனடியாக இராணுவத்தினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இந்த நிலைகளை பார்க்கின்ற பொழுது, போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு ஜனாதிபதி தயாராகிறார் போல் தெரிகிறது என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றார்கள்.