“நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல.. மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருவேன்”- ஜனாதிபதி ரணில்

“நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல.. மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருவேன்”- ஜனாதிபதி ரணில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  “நான் ராஜபக்சவின் நண்பன் அல்ல; நான் இலங்கை மக்களின் நண்பன்” என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த ரகசிய வாக்கெடுப்பில், அந்நாட்டின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் பதவியேற்ற பிறகு, இலங்கையில் உள்ள பழமையான புத்த ஆலயமான கங்காராம் கோயிலுக்கு ரணில் சென்றார்.

அங்கு ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களிடம் பேசியது: “நான் ராஜபக்சவின் நண்பன் நல்ல. நான் எப்படி ராஜபக்சவின் நண்பனாக இருக்க முடியும். நான் எல்லா காலங்களிலும் அவர்களை எதிர்த்தேன்.

நான் இதற்கு முன்னர், இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுடன் பணியாற்றியுள்ளேன். அவர் வேறு கட்சி, நான் வேறு கட்சி. வேறொரு கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவருடன் பணியாற்றுவதற்காக நான் அவருடைய நண்பன் என்று அர்த்தமல்ல. நான் இலங்கை மக்களின் நண்பன். மக்கள் விரும்பும், நாட்டிற்கு தேவையான அனைத்து மாற்றத்தையும் கொண்டு வருவேன்” என்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே (73) தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் பதிவான 223 வாக்குகளில் ரணிலுக்கு ஆதரவாக 134 வாக்குகள் கிடைத்தன.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலக நேரிட்டது.