கொடகதெனிய சிறுமி சேயா சந்தவ்மினி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவன் பொலிஸாரிடம் ஒரு கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
எவ்வித சாட்சியங்களும் இன்றி தன்னைக் கைது செய்து அவமானப்படுத்தியதாகவும், இதனால் தான் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாணவன் குறித்த அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சுரன்ஜன் பிரதீப் சேனவிரத்ன என்ற குறித்த பாடசாலை மாணவனே உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை மனித உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இன்னும், அடிப்படையற்ற சாட்சியங்களுடன் தன்னைக் கைது செய்து, தன்மீது பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாகவும், தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்ததாகவும:, இதனால் தான் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பெரும் உளைச்சலுக்கும் பாதிப்புக்கும் உள்ளானதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.
இதனால் தான் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும், சிறுமி சேயா கொலைச் சம்பவத்தில் கொடகதெனிய பொலிஸார் நடத்திய விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மாணவனின் அடிப்படை மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு கொடகதெனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுஜித் உதயகுமார, நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்திட்யசகர் ஜயந்த அதுகோரள, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் லசந்த ரத்நாயக்க ஆகிய மூவருமே காரணம் என குறித்த மனுவில் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி குறித்த மூவருக்கெதிராகவும் உரிய தண்டனை வழங்குமாறு மாணவன் குறித்த அடிப்படை மனித உரிமை மனுவில் கோரியுள்ளார்.