காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில்  ஐவர் நுவரெலியா, களுகலை – பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருட்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேலே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை  கைதுசெய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார், அங்கு மேலும் 4 பேர் மறைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்களும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஐந்து சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.