சர்வ கட்சி அரசு: சாதகமான நிலைப்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி – இராதாகிருஷ்ணன்

சர்வ கட்சி அரசு: சாதகமான நிலைப்பாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி – இராதாகிருஷ்ணன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ” தமிழ் முற்போக்கு கூட்டணியானது, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படும் கூட்டணி கிடையாது. அது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கூட்டணியாகும். எனவே, தலைமைப்பதவியில் மனோ கணேசன் நீடிப்பார். ஒன்றிணைந்த எமது பயணம் தொடரும். ” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (01.08.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி அரசமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் நலன்கருதி இதில் இணையுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வக்கட்சி அரசையே நாடும், சர்வதேசமும்கூட எதிர்பார்க்கின்றது.  நாமும் அதனை வரவேற்கின்றோம்.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக மலையக மக்கள் முன்னணி சாதகமான நிலைப்பாட்டில் இருந்தாலும், தமிழ் முற்போக்கு கூட்டணியாக எடுக்கப்படும் முடிவே அறிவிக்கப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 03 ஆம் திகதி கூடவுள்ளது. அதன்பின்னரே சர்வக்கட்சி அரசில் இணைவதா அல்லது எமது வகிபாகம் எவ்வாறு அமையும் என்பது குறித்து அறிவிக்கப்படும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி என்பது தேர்தலுக்காக முளைத்த கூட்டணி அல்ல. அது மக்களுக்கான – கொள்கை அடிப்படையிலான கூட்டணி.  எமது கூட்டணிக்குள் எவ்வித பிளவும் இல்லை. ஓரணியில் எமது பயணம் தொடரும். கூட்டணியின் தலைமைப்பதவியில் நீடிக்குமாறு மனோ கணேசனிடம் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். எமது மக்களுக்கான வேலைத்திட்டத்தை கூட்டாக முன்னெடுப்பதே சிறந்ததாக அமையும்.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமாகவே தற்போது பேசப்படுகின்றது. மாறாக அமைச்சு பதவி பற்றி பேசப்படவில்லை. உரிய நேரத்தில் அதற்கான கலந்துரையாடல் இடம்பெறும்.” – என்றார்.