சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் மேடை  நிகழ்வொன்றின்போது , இந்திய – பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) கத்திக் குத்துக்கு இலக்கானார்.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நியூ ஜெர்சி, ஃபேர்வியூவில் இருந்து ஹாடி மாதர் என்ற சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர், மேடைக்கு சென்று, ருஷ்தியையும் அவரை நேர்காணல் செய்பவரையும் தாக்கியதாக நியூயோர்க் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர், நாவலாசிரியர் ருஷ்டியை 15 தடவைகள் கத்தியால் குத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட அவர்,  ஹெலிகொப்டர் மூலம் பென்சில்வேனியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சல்மான் ஒரு கண்ணை இழக்க நேரிடும் என்றும், அவரது கையில் நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அவரது கல்லீரல் சேதமடைந்துள்ளதாகவும் அவரது பிரதிநிதியான ஆண்ட்ரூ வைலி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பிறந்த நாவலாசிரியர் ருஷ்டி, 1981 இல் மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்ற நாவல் மூலம் புகழ் பெற்றார்.  இங்கிலாந்தில் மட்டும் இந்த நாவல்  ஒரு மில்லியன் பிரதிகள் விற்பனையாகின.

எனினும் 1988 ஆம் ஆண்டில் அவரது நான்காவது நாவலாக வெளிவந்த – Satanic Verses (சாத்தானின் வசனங்கள் ) காரணமாக சுமார் பத்து வருடங்கள் அவர் மறைந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த  நாவல் சில முஸ்லிம்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியது. அதன் உள்ளடக்கம் தெய்வ நிந்தனை என்று கருதி, சில நாடுகளில் அது தடை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு சுமார் 30 வருடங்களாக மரண அச்சுறுத்தல் இருந்துவந்தது.

புத்தகத்தின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர் 1991 இல் குத்திக் கொல்லப்பட்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு இத்தாலிய மொழிபெயர்ப்பாளரும் கத்தியால் குத்தப்பட்டதுடன், புத்தகத்தின் நோர்வே  பதிப்பாளரும் சுடப்பட்டார்.

எனினும், இருவரும் உயிர் பிழைத்தனர். ருஷ்டிக்கு எதிரான கலவரங்களில் பலர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகம் மீது கல்லெறியப்பட்டது.

புத்தகம் வெளியாகி ஒரு வருடம் கழித்து, ஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதுல்லா கொமேனி ருஷ்டியை தூக்கிலிட உத்தரவிட்டார்.

அதற்காக அவர் 3 மில்லியன்  டொலர்களை வெகுமதியாகவும் அறிவித்திருந்தார். இன்னும் அந்த வெகுமதி நடைமுறையில் உள்ளது.

எனினும், ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான தெளிவான காரணங்கள் தெரியவரவில்லையென காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.