(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
அடிப்படைவாதப் போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக் கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கை துரிதமாக விசாரணை செய்வதற்காக தான், நீதிமன்ற விடுமுறை காலப் பகுதியிலும் அவ்வழக்கை விசாரணைக்கு அழைத்தபோதும், சட்டவாதிகளும் சட்டத்தரணிகளும் விசாரணைக்கு தயாரின்மையால் இவ்வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதாக புத்தலம் மேல் நீதிமன்ற நீதிபதி நஹீ அபர்னா சுவந்துருகொட (23) திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு இன்று புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அரபுக் கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்காகவும், மத்ரஸா அதிபருக்காகவும் சட்டத்தரணி ஷெனால் பெரேரா நீதிமன்றில் ஆஜரானார்.
வழக்குத்தொடுனர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்த வழமையாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்களான சுதர்ஷன டி சில்வா, லக்மினி கிரிஹாகம ஆகியோர் ஆஜராகும் நிலையில், இன்று அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ் முன்னிலையானார். இந்நிலையில் இன்றைய தினம் அரச தரப்பின் பிரதான சாட்சியாளரிடம் மேலஹிக குறுக்கு விசாரணைகள் தொடர இருந்தன. எனினும் பிரதான சாட்சியாளர் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
இதன் போது மன்றில் விடயங்களை முன் வைத்த அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ், பிரதான சாட்சியாளரை அடுத்த தவணையின் போது நீதிமன்றுக்கு அழைத்துவரும் பொறுப்பை வழக்குத் தொடுநரான முறைப்பாட்டாளர் தரப்பு ஏற்பதாக கூறினார். அத்துடன் வழக்கின் அடுத்த தவணை விசாரணைகளை ஒக்டோபர் 4 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடத்துமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக முறைப்பாட்டாளர் தரப்பின் 2,3 ஆம் சாட்சியாளர்களை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாறும் கோரினார்.
இதன்போது ஒக்டோபர் 4 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுக்க பிரதிவாதிகளுக்கு ஆட்சேபனை உள்ளதா என நீதிபதி வினவினார். எனினும் பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்டத்தரணி ஷெனால் பெரேரா அதற்கு ஆட்சேபனை இல்லை என கூறினார்.
இதனையடுத்து திறந்த மன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட பின்வருமாறு அறிவித்தார்.
‘ இவ்வழக்கை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காகவே நீதிமன்ற விடுமுறை காலத்தில் கூட அதனை விசாரணைக்கு இரு தரப்பின் ஒப்புதலுடன் அழைத்தேன். நேற்றும் இன்றும் வழக்கை விசாரிக்கவே திட்டமிடப்பட்டது. எனினும் சாட்சி விசாரணைகளுக்கு இரு தரப்பின் சட்டத்தரணிகளும் தயாரில்லை என தெரிவித்துள்ளதால் என்னால் வழக்கை விசாரணை செய முடியவில்லை. இதன் காரணமாகவே இந்த வழக்கு பிற்போடாப்படுகினறது.’ எனக கூறி வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் 2,3 ஆம் இலக்க அரச சாட்சியாளர்களுக்கும் நீதிமன்றில் ஆஜராக நீதிபதி அறிவித்தல் அனுப்பினார்.