(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மக்களிடம் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ருமேனியாவில் வேலை வழங்குவதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்து, வாக்குறுதி அளித்தபடி வேலை வழங்கப்படவில்லை எனப் பல முறைப்பாடுகள் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்துள்ளதுடன், அதன்படி இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
21/1/1, மெத வெலிக்கட வீதி, இராஜகிரிய என்ற முகவரியில் இந்த நிறுவனத்தை நடத்தி வந்த நிசிகா சமன்மலி சமரவீர என்ற சந்தேகநபர் அங்கு கைது செய்யப்பட்டார். அந்த இடத்தில் இருந்து 23 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல ரோமானிய வேலை விண்ணப்பங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இந்தப் பெண் 10 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் இதே போன்ற குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் ஒகஸ்ட் 30ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 500,000 ரூபா ரொக்கப் பிணை , தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தனிப்பட்ட சரீர பிணையில் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் சந்தேகநபருக்கு வெளிநாட்டு பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் அக்டோபர் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.