அவன்ட்கார்ட் போன்றே மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
என்.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று(11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவன்ட்கார்ட் பிரச்சினை நாட்டின் ஏனைய பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்துள்ளது. மோசடி இடம்பெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி அவற்றை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்.
துறைசார் அமைச்சர்கள் சிலர் இவ்வாறு மோசடி இடம்பெறவில்லை எனக் கூறுகின்றனர். எனினும், நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அவன்ட்கார்ட் பிரச்சினையை ஓர் போர்வையாக பயன்படுத்தி ஏனைய பிரச்சினைகளை மூடி மறைக்க முடியாது.
இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடியாக மத்திய வங்கி பிணை முறி மோசடியை குறிப்பிட முடியும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களான ஜே.வி.பி கட்சியின் பத்திரிகையான லங்கா பத்திரிகையில் இந்த மோசடி குறித்து முதன் முதலாக வெளிப்படுத்தப்பட்டது.
இந்த விடயம் குறித்து லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் அமைச்சரவையின் பிரபல அமைச்சர் ஒருவரே முறைப்பாடு செய்தார்.
மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் வெளிநாட்டு பிரஜையாகும், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கோப் ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவிருந்த தினம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஆணைக்குழுவில் சாட்சியமளித்த மத்திய வங்கி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.