சோபித தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள தேரறொருவருக்கு தடை

காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள மற்றுமொரு தேரருக்கு நுகேகொடை நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது.

காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் பிரதான சீடராக இருந்தவர் வதுருவிலே சுஜாத ஹிமி என்ற தேரர் ஆவார். அதன் பிரகாரம் மாதுளுவாவே சோபித தேரருக்கு அடுத்து கோட்டே நாகவிகாரையின் பொறுப்பாளராக நியமிக்கப்படும் தகுதி இவருக்கு வாய்த்திருந்தது.

எனினும் கடந்த 2011ம் ஆண்டு இவரது சீடர் அந்தஸ்தை மாதுளுவாவே சோபித தேரர் ரத்துச் செய்திருந்தார்.

இந்நிலையில் சோபித தேரரின் மறைவை அடுத்து சுஜாத தேரர் நாகவிகாரைக்குள் நுழைந்து பதட்ட நிலையை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.

இதன்காரணமாக அவர் நாகவிகாரைக்குள் நுழையவோ, சோபித தேரரின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ளவோ முடியாதவாறு நுகேகொடை நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை உத்தரவு ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும் இறுதிச்சடங்குகள் நடைபெறும் நாடாளுமன்ற மைதானத்துக்குள் நுழையவும் சுஜாத தேரருக்கு தடை விதிக்குமாறு கோரிய பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்த நுகேகொடை மாஜிஸ்திரேட் கனிஷ்க விஜேரத்ன, அதற்கான தடையுத்தரவை கடுவலை நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மைதானம் அமைந்துள்ள பிரதேசம் கடுவலை நீதிமன்ற எல்லைக்குள் அமைந்திருப்பதே அதற்கான காரணம் என்று தெரிய வந்துள்ளது.