படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் நூலிழையில் ஏஆர் ரகுமான் மகன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான இசைப்புயல் ஏஆர் ரகுமானின் மகன் ஏஆர் அமீன் சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பாடல் பாடி கொண்டிருக்கும்போது திடீரென லைட்டிங் செய்யப்பட்டிருந்த விளக்குகள் கீழே விழுந்தன. ஒரு சில அங்குல வித்தியாசத்தில் அந்த லைட்டுகள் கீழே விழுந்ததால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து ஏஆர் அமீன் தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’நான் இன்று பாதுகாப்பாகவும் உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் தான் காரணம். எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் ஆன்மீக ஆசிரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பில் இருந்தபோது கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போது கிரேன் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரவிளக்குகள் நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு மிக அருகில் விழுந்தது. சில அங்குலம் தான் தள்ளி நின்றிருந்தால் என் தலைமீது அந்த விளக்குகள் விழுந்திருக்கும்.
நானும் எனது குழுவும் மிகப்பெரிய அதிர்ச்சி அடைந்தோம். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள சிறிது நேரம் ஆகியது என்று தெரிவித்துள்ளார். ஏஆர் அமீன் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

