
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் டாஸ்க் மானேஜர் செயலி,
விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், டாஸ்க் மானேஜரை அடிக்கடி பயன்படுத்தி வந்த பயனாளர்களுக்கு, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்கும் டாஸ்க் மானேஜர் செயலி, பல ஆச்சரியமூட்டும் மகிழ்ச்சியான உணர்வைத் தந்துள்ளது. இங்கு, விண்டோஸ் 10ல், டாஸ்க் மானேஜர் செயலியில் தரப்பட்டுள்ள மேம்பாட்டினையும், கூடுதல் வசதிகளையும் காணலாம். டாஸ்க் மானேஜர் நமக்கு பல நேரங்களில், நல்ல உதவியைத் தரும் செயலியாக, விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. ஒரே பார்வையில், இது கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்தையும் காட்டும். அதன் செயல்பாடுகளைத் துல்லியமாய்க் காட்டும். உங்கள் கம்ப்யூட்டரில் அப்போது இயங்கும் சேவைகளையும் சரியாகப் பட்டியலிடும்.
பொதுவாக டாஸ்க் மானேஜர் மூலம், நாம் முடங்கிப் போன புரோகிராம்களை நிறுத்தலாம். விண்டோஸ் 10ல் உள்ள டாஸ்க் மானேஜர், உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை நாம் கண்காணிக்க உதவுகிறது. இதற்கு சி.பி.யு.வில் காட்டப்படும் வரைபடங்கள் மற்றும் டேட்டா அளவு உதவுகின்றன. உங்கள் கம்ப்யூட்டர் மற்ற கம்ப்யூட்டர்களுடன் ஒரு வலைப்பின்னலில் இணைக்கப்பட்டிருந்தால், டாஸ்க் மானேஜரைப் பயன்படுத்தி நெட்வொர்க் இயங்கும் நிலையினைக் காணலாம். எந்த எந்த கம்ப்யூட்டரெல்லாம் இணைக்கப்பட்டுள்ளன என்பதனையும் கண்டறியலாம்.
விண்டோஸ் 10ல் தரப்பட்டுள்ள டாஸ்க் மானேஜர் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் தரப்பட்ட டாஸ்க் மானேஜர் செயலியைக் காட்டிலும் மிக எளிமையாக இயக்கக் கூடியதாகவும், விரைவில் செயல்படக் கூடியதாகவும் உள்ளது. கம்ப்யூட்டரை இயக்குவதில், மிகக் குறைவான அனுபவம் கொண்டவர்களுக்குக் கூட இதனை இயக்குவது எளிதானதாக இருக்கிறது. குறிப்பாக, முடக்கப்பட்டு மூடப்படாமல் இருக்கும் புரோகிராம்களை இதன் மூலம் மிக எளிதாக மூடிவிட முடியும். அதே நேரத்தில், சில செயல்பாடுகளை மிகவும் மேம்பட்ட நிலையில் மேற்கொள்ள இயலும் வகையில் டாஸ்க் மானேஜர் இடம் தருகிறது. விண்டோஸ் 10 தரும் இத்தகைய செயல்பாடுகளை இங்கு குறிப்பிட்டுக் காணலாம்.
Shot011.png
செயலிகள் இயக்கத்தை நிறுத்துதல்:
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் டாஸ்க் மானேஜரை இயக்குவது, செயல்படாமல் உள்ள செயலிகளை நிறுத்துவதற்குத்தான். இதற்கான வழிகளை மிக எளிமையான பயனர் இடைமுகம் (user interface) மூலம் விண்டோஸ் 10 சிஸ்டம் வழங்கும் டாஸ்க் மானேஜர் தருகிறது. இங்கு, ஏதேனும் ஒரு புரோகிராம் இயங்காமல் முடங்கிப் போன நிலையில், டாஸ்க் மானேஜரை இயக்கினால், டாஸ்க் மானேஜரில் அந்த அப்ளிகேஷனும் அருகே, End Task பட்டனும் தரப்படுகிறது. அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, பட்டனில் கிளிக் செய்து, பின் டாஸ்க் மானேஜரை மூடிவிடலாம். உங்களுக்குத் தொல்லை கொடுத்த புரோகிராம் மூடப்படும். இதற்கான யூசர் இண்டர்பேஸ் மிக மிக எளிமையானதாகவும், நேரடியான செயல்பாட்டிற்கு வழி தருவதாகவும். உள்ளது.
எளிதாக கூடுதல் தகவல்கள்:
நீங்கள் டாஸ்க் மானேஜரைப் பயன்படுத்தி அதிக செயல்பாடுகளை மேற்கொள்ளும் துடிப்புள்ளவராக இருந்தால், இதில் உள்ள More Details பட்டனை அழுத்தி, டாஸ்க் மானேஜரை இன்னும் பல வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். இதில் ஏழு டேப்கள் தரப்பட்டுள்ளன. அவை: Processes, Performance, App History, Startup, Users, Details, மற்றும் Services. இதனை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
Processes டேப்: இந்த டேப்பினை அழுத்தினால், அது இன்னும் விரிவான சில பணிகளுக்கான தளமாக விரியும். அவை Apps, Background Processes, மற்றும் Windows processes. இங்கு அதிகம் கூட்டம் இல்லாமல் தகவல்கள் காட்டப்பட, முதன்மை செயல்பாடுகள் மட்டும் மாறா நிலையில் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். கூடுதலாக, துணை செயல்பாடுகளைக் கொண்ட செயல்பாடுகளுக்கு அருகே ஓர் அம்புக் குறி இருப்பதனைக் காணலாம். அந்த அம்புக் குறியில் கிளிக் செய்தால், கூடுதல் செயல்பாடுகள் குறித்து பட்டியல் கிடைக்கும். Processes டேப்பில், எந்த அப்ளிகேஷன் அதிகமாக கம்ப்யூட்டரின் செயல்திறனைப் பயன்படுத்துகிறது என்ற தகவலைப் பெறலாம் என்பது அனைவருக்கும் பயன்படும் ஒரு தகவலாகும்.
இங்கு இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது படத்தைப் பார்த்தால், CPU, Memory, Disk, and Network ஆகிய அனைத்தும் அதன் செயல்திறன் சதவீதத்தினைக் காட்டுவதனைப் பார்க்கலாம். அவை வண்ணத்தில் காட்டப்படுகின்றன. மைக்ரோசாப்ட் இந்த வண்ணக் குறியீட்டினை heat map என அழைக்கிறது. இந்த வண்ணம் எவ்வளவு கருமைப் பட உள்ளதோ, அந்த அளவிற்கு, அந்த செயலி, அதிகமாக கம்ப்யூட்டரின் திறனைப் பயன்படுத்துகிறது என்று பொருள். மேலும், இந்த நெட்டு வரிசையின் மேலாகக் கிளிக் செய்தால், செயலிகளின் திறன் உறிஞ்சும் தன்மைக்கேற்ப அவை பட்டியலிடப்படும்.
Performance டேப்: சி.பி.யு., மெமரி, டிஸ்க் மற்றும் உங்கள் கம்ப்யூட்டரின் ஈதர்நெட் இணைப்பு, வை பி அல்லது புளுடூத் இணைப்புகளின் அப்போதைய செயல்பாட்டின் தன்மை காட்டப்படும். இவை அனைத்தையும் இணைத்த போது, ஒவ்வொரு பிரிவும் தனக்கென ஒரு பகுதியினை இந்த டேப்பின் கீழ் எடுத்துக் கொண்டு காட்டுவதனை காணலாம்.
App history டேப்: இந்த டேப்பில், ஓர் அப்ளிகேஷன் ஒன்றை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்பதனை, சி.பி.யு. நேரத்தின் அடிப்படையில் காட்டப்படுவதனைக் காணலாம். அந்த நேரத்தில், அந்த புரோகிராம், கம்ப்யூட்டரின் திறனை எந்த அளவிற்குப் பயன்படுத்தியுள்ளது என்பதனையும் காணலாம்.
Startup டேப்: இந்த டேப்பின் பிரிவில், கம்ப்யூட்டர் இயக்கப்படும்போதே, மாறா நிலையில், எந்த புரோகிராம்கள் எல்லாம் இயக்கப்படுகின்றன என்று காட்டப்படுகின்றன. இந்த பட்டியலில் உள்ள அப்ளிகேஷன்களைத் தயாரித்து வழங்கிய நிறுவனங்கள் பெயர்கள் எல்லாம் தரப்பட்ட போதும், நமக்கு இவற்றின் பாதிப்பு குறித்த தகவல் காட்டப்படுகிறது. விண்டோஸ் 10க்கு முன்னர், இதனை அறிய வேண்டும் என்றால், Configuration tool (msconfig.exe) என்று சென்று காண வேண்டும். இப்போது அது டாஸ்க் மானேஜர் விண்டோவிலேயே காட்டப்படுகிறது.
ஏதேனும் ஒரு புரோகிராமினை, ஸ்டார்ட் அப் எனப்படும் மாறா நிலையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றால், கீழாகத் தரப்பட்டிருக்கும் Disable பட்டனை அழுத்தினால் போதும். அழுத்திய பின்னர், அந்த குறிப்பிட்ட புரோகிராம் இயங்கா நிலைக்குக் கொண்டு செல்லப்படும். ஆனால், அது பட்டியலில் இருக்கும். உடன் அந்த பட்டன் Enable என மாறிவிடும். பின்னர் எப்போதாவது, அந்த புரோகிராம் ஸ்டார்ட் அப் நிலைக்கு வர வேண்டும் என விரும்பினால், இந்த பட்டனை அழுத்திக் கொண்டு வரலாம். ‘பயாஸ்’ என்னும் அமைப்பு, ஆப்பரேட்டிங் சிஸ்டம், கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பகுதியுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் செயலியாகும். இதன் மூலம், விண்டோஸ் சிஸ்டம் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன், கம்ப்யூட்டர் அதன் சாதனங்களைத் தயார் நிலைக்குக் கொண்டு வருவதற்கு எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டுகிறது. இதனை அறிந்து கொள்வதன் மூலம் மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள சிக்கல்களை நாம் அறிய முடிகிறது.
User டேப்: யூசர் டேப்பை அழுத்தி, கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் லாக் இன் செய்து, அதனை இயக்கிக் கொண்டிருப்பவர் சார்ந்த தகவல்களை அறியலாம். அத்துடன், அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களின் பட்டியலையும் பெறலாம்.
Details டேப்: இந்த பிரிவில், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் Processes டேப்பில் காட்டப்பட்டவற்றைக் காணலாம். ஒவ்வொரு செயலாக்கத்தின் பெயர், அவற்றின் திறன் அளவு மற்றும் அது குறித்த விளக்கத்தினையும் காணலாம்.
Services டேப்: இந்தப் பிரிவில், நாம் கம்ப்யூட்டரில் இயங்கும் சேவைகளைத் தெளிவாக அறிந்து கொள்ள வழிகளும் பட்டியலும் தரப்படுகிறது. விண்டோஸ் 10 சிஸ்டம், இது போன்ற பல வசதிகளை மேம்படுத்தப்பட்ட நிலையில், புதிய வசதிகளுடன் தருகிறது. இந்த சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதற்கு இந்த வசதிகள் நம்மை ஊக்கப்படுத்துகின்றன என்றால் அது மிகையாகாது.
