“இந்தி சினிமாவில் ஓரங்கட்டப்பட்டேன்”: பிரியங்கா சோப்ரா அதிர்ச்சி தகவல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தான் இந்தி சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
“இந்தி திரைத்துறையில் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வரவில்லை. இதனால் இந்தி சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில் தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது” என அவர் தெரிவித்திருந்தார்.ஏற்கெனவே நெபோடிசம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட பிரச்சினையில் சிக்கியிருக்கும் இந்தி திரைத்துறை, பிரியங்காவின் குற்றச்சாட்டால் இப்போது மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.
ஒரு சிலரின் கைக்குள்தான் பாலிவுட் இன்னும் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.பிரியங்காவுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.நடிகை கங்கனா ரனாவத், “தன்னைத் தானே செதுக்கிய ஒரு நடிகையை இந்தியாவை விட்டு விரட்டிவிட்டார்கள். கரண் ஜோஹர்தான் அவருக்கு தடை விதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார்.
பிரியங்கா சோப்ராவின் உறவினரும் நடிகையுமான மீரா சோப்ரா (நிலா) கூறும்போது, “பாலிவுட்டில், வெளியில் இருந்து வந்தவர் கள், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வெற்றிபெற்றவர்களாகவே இருந்தாலும் இறுதியில் அவர்கள் ‘வெளியில் இருந்து வந்தவர்களாக’வே கருதப்படுவார்கள்.
அவர்களின் விதியைப் பின்பற்றவில்லை என்றால் நசுக்கப்படுவதும் துண்டாடப்படுவதும் ஒருபோதும் நிற்காது. ஆனால் பிரியங்கா சோப்ரா, தனது வெற்றியின் மூலம் அவர்கள் முகத்தில் பளார் என அறைந் திருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.