கெகிராவயில் மரதனோடிய அண்ணனுக்கு ஆதரவாக சென்ற தம்பி உயிரிழப்பு!

கெகிராவயில் மரதனோடிய அண்ணனுக்கு ஆதரவாக சென்ற தம்பி உயிரிழப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெகிராவ-பலாகல குடா ஹெட்டியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற புத்தாண்டு தின மரதன் ஓட்டப் போட்டியில் பத்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாகல குடா ஹெட்டியாவ கிராமத்தின் பொது விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு விழா நடைபெற்றது. அதேநேரம் நடைபெற்ற திறந்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட தனது 15 வயது சகோதரனுக்கு ஆதரவாக இருந்த 10 வயது இளைய சகோதரனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலாகல குடா ஹெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த தனுக லக்ஷன் என்ற 10 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பலாகல மகா வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

குடா ஹெட்டியாவ மைதானத்தில் இருந்து ஆரம்பமான மரதன் ஓட்டத்தில் போட்டியாளர்கள் 4 கிலோமீற்றர் தூரத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. போட்டியில் கலந்து கொண்ட தனது 15 வயது சகோதரனின் போட்டிக்கு ஆதரவாக இந்தப் 10 வயதுக் சிறுவன் இருந்துள்ளதுடன், போட்டியின் பாதியை முடித்துக் கொண்டு போட்டியாளர்கள் பலாகல பிரதேசத்தை அடைந்த போது, ​​குறித்த சிறுவனுக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் சிறுவனை கலாவெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை மேலதிக அவசர சிகிச்சைக்காக கெக்கிராவ வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு கலாவெவ வைத்தியசாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் கெக்கிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்