நாட்டில் மீண்டும் தலையெடுக்கும் மலேரியா நோய்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய 35 வயது நபர் ஒருவர் மலேரியாவினால் மரணமடைந்துள்ளார்.
அதற்கமைய, இலங்கையில் ஒழிக்கப்பட்ட மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பல வருடங்களுக்குப் பின்னர் மரணமான சம்பவம் இதுவாகும்.
பேருவளை, சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், தன்சானியாவுக்கு பயணம் மேற்கொண்டு கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி இலங்கை திரும்பிய நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு நாட்களாக காய்ச்சலுடன் வீட்டிலிருந்த அவர், கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 15 ஆம் திகதி அவ்வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர், அவரது பயணத்திற்கு முன்னதாக, நோயை தடுக்க பயன்படுத்தும் மருந்தை உட்கொள்ள மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிக்கல்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் அவர் மருந்தை உட்கொள்ள மறுத்துள்ளதாக தெரிய வந்துள்ளதாக இது தொடர்பில், மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் சம்பா ஜயந்த அலுத்வீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருந்து மலேரியா ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், நோய் பரவியுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து இந்த நோய் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளில் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் மற்றும் இரத்தினக்கல் வர்த்தகர்களும் இந்த இடர் குழுக்களில் உள்ளடங்குகின்றனர்.
எனவே, மலேரியா பரவும் நாடுகளுக்குச் செல்வதற்கு முன்னர் முறையான மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சம்பா ஜயந்த அலுத்வீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, இன்று (26) முதல் எதிர்வரும் மே 02ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 49 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், டெங்கு அபாயம் அதிகம் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது