கனடா தூதுவரை அழைத்து, கண்டித்த அலி சப்ரி..!

கனடா தூதுவரை அழைத்து, கண்டித்த அலி சப்ரி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
கனேடிய பிரதமர் வெளியிட்ட இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அழைப்பு.

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை இன்று, 2023 மே 19ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 மே 18ஆந் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை கண்டித்து நிராகரித்தார்.

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த அறிக்கை பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், கனடாவில் உள்நாட்டு அரசியல் நுகர்வுக்காக வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளால் கிட்டத்தட்ட 3 தசாப்த காலமாக நாட்டில் நீடித்து வந்த பயங்கரவாத மோதல்கள் தொடர்பான ‘இனப்படுகொலை’ என்ற இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை இலங்கை கடுமையாக நிராகரிக்கின்றது. பொருளாதார ஸ்திரத்தன்மை, சமாதானம் மற்றும் அனைவருக்குமான நல்லிணக்கத்தை நோக்கி அரசாங்கம் செயற்பட்டு வரும் இந்த குறிப்பிட்ட தருணத்தில், அறிக்கையில் உள்ள தவறான மற்றும் ஆத்திரமூட்டும் குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களை துருவமுனைப்புக்கு உட்படுத்துவதற்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மீதான ‘இனப்படுகொலை’ என்ற பதத்தின் தன்னிச்சையான மற்றும் பிழையான பாவனையானது, பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலைக் கொண்ட புலம்பெயர் நாடுகளில் உள்ள இலங்கைக்கு எதிரான அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட ஒரு சிறிய பிரிவினரால் இயக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

நீண்டகால இருதரப்பு பங்காளியாக, கனேடிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை இலங்கை வலியுறுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆதரவான உறவை ஊக்குவிக்கும் அதே வேளையில் கனடாவில் உள்ள இலங்கையின் பாரம்பரிய சமூகத்தை உள்ளடக்கிய அபிவிருத்தி மற்றும் நிலையான சமாதானம் ஆகிய எமது பொதுவான நோக்கங்களை நனவாக்குவதற்கு ஆக்கபூர்வமாக ஈடுபடும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு,
2023 மே 20