‘களத்திலோ, வெளியிலோ எதுவானாலும் சிஎஸ்கே உடன்தான்’ – அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து தோனியின் பதில்!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன்” என்று தோனி தெரிவித்துள்ளார்.குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனையாக 10வது முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் 6 முறை ஐபிஎல் பைனலுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.173 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு சுருண்டது. வெற்றிக்குப் பின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, “இது மற்றொரு இறுதிப் போட்டி என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஐபிஎல் இப்போது மிகப்பெரிய தொடர். முன்புகூட 8 அணிகள், இப்போது 10 அணிகள். எனவே இதை சாதாரணமாக இன்னொரு இறுதிப் போட்டி என்று நான் சொல்லமாட்டேன்.
2 மாத கடின உழைப்பு இதில் உண்டு. அனைவருக்கும் பங்களிப்பு உண்டு.குஜராத் டைட்டன்ஸ் ஒரு அற்புதமான அணி. அவர்களும் நன்றாகவே சேஸ் செய்தார்கள். மைதானத்தின் சூழல்கள் நன்றாக இருந்தால் ஜடேஜாவுக்கு உதவும் என்று நினைத்தேன். அப்படியான சூழல் வாய்க்கும் பட்சத்தில் ஜடேஜாவின் பந்துகளை எதிர்கொள்வது கடும் சிரமமாக இருக்கும். அதேபோல் நடந்தது. அவரின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றியது.வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றும் முயற்சித்தோம். முடிந்தவரை அவர்களுக்கு நம்பிக்கை அளித்து, அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை கண்டுபிடிக்க ஊக்குவிக்க முயற்சிக்கிறோம்.
தங்கள் பந்துவீச்சின் செறிவைத் தொடர்ந்து தேடுங்கள் என்பதே இளம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு நாங்கள் கூறும் அறிவுரை. பிராவோ போன்ற உதவியாளர்கள் இந்த விஷயத்தில் பக்க பலமாக உள்ளனர்.பீல்டிங் செட் செய்யும் விதத்தில் நான் கொஞ்சம் எரிச்சலூட்டக்கூடிய கேப்டன்தான் என்று நினைக்கிறேன். என் உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டே நான் செயல்படுகிறேன். பீல்டிங் செய்பவர்கள் என் மீது ஒரு கண்ணை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன். கேட்சை தவறவிட்டால் என்னிடம் இருந்து எந்த ரியாக்சனும் இருக்காது. அப்போதும் பீல்டர்கள் என் மீது ஒரு கண் வைத்து கொள்ள சொல்வேன்” என்று பேசினார் தோனி.
அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்று தோனியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, “அது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதை முடிவு செய்ய இன்னும் 8-9 மாதங்கள் உள்ளன. இப்போது ஏன் அந்த தலைவலியை எடுக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும்சொல்கிறேன். மைதானத்திலோ அல்லது மைதானத்துக்கு வெளியிலோ எதுவானாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தான் இருப்பேன். விளையாடுகிறேனோ அல்லது வேறு ஏதாவது பொறுப்பிலா இருப்பேனோ என்பது தெரியவில்லை. எப்படியானாலும், நான் எப்போதும் சிஎஸ்கே அணியின் அங்கமாகவே இருப்பேன்” என்று தோனி உறுதிபட கூறினார்.