புத்தளத்தில் பாடசாலை ஆசிரியரை தாக்கிய 4 மாணவர்களுக்கு விளக்கமறியல்..!
புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைதான 04 மாணவர்களும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் முடி வளர்த்துக்கொண்டு நேற்று (23) பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், ஆசிரியரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 வயதான குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திரும்பிய போது, மாணவர்கள் அவரை கிண்டல் செய்துள்ளதுடன், ஆசிரியர் தன் வீட்டை சென்றடைந்த போது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 25 மாணவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், ஏனைய மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது ஆசிரியர் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தமக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இனைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக புத்தளம் கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் கோஷங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும் தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆசிரியர்கள் தண்டிக்கப்பட்டதை தாம் கண்டிப்பதாகவும் தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.