நவாஸ் ஷெரீப் அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குராம் தஸ்கிரிகான் இலங்கை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசார்ட் பதியூதீனை சந்தித்த போதே பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பான தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் தெரிவாகியுள்ள நவாஸ் ஷெரீப்பின் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.

இதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இந்திய, அமெரிக்க ஆதிக்கம் இலங்கையில் வியாபித்துள்ள இந்நிலையில், பாக்கிஸ்தானும் தனது உறவை இலங்கையுடன் புதுப்பிக்க முயற்சி செய்வதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

சீன அரசாங்கத்தின் செல்வாக்கு இலங்கையில் குறைந்திருந்தாலும், அது பாகிஸ்தான் அரசாங்கத்தோடு நெருங்கிய உறவை வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.