“உங்களின் இந்த உதவியை, எங்கள் நாடு என்றும் மறக்காது” – தோனிக்கு நன்றி கூறிய மலிங்க..!
உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு என்றும் மறக்காது என்று தோனிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா நன்றி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வரும் நிலையில் நாளை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கண்டுபிடிப்பான பதிரானா மீது தோனி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். 20 வயதே ஆன பதிரானா தோனியின் ஆதரவில் இருப்பதால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர்
சமீபத்தில் பதிரானா குடும்பத்தினர் சென்னையில் தோனியை சந்தித்த போது ’எங்கள் பதிரானா ஒரு நல்ல பாதுகாவலர் கையில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்றும் தெரிவித்தனர். அதற்கு தோனி, ‘நீங்கள் பதிரானா குறித்து எந்த கவலையும் பட வேண்டாம், அவரை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவரது குடும்பத்தினருக்கு தோனி நம்பிக்கையை அளித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, தோனிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதில், தோனி.. எங்கள் குட்டி பதிரானாவை எங்களுக்கு இன்னொரு மலிங்கா கிடைக்கும் வகையில் தயார் செய்து உள்ளீர்கள், உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு என்றும் மறக்காது’ என்று தெரிவித்துள்ளார்.