சோபித தேரரின் இழப்பும், கேள்விக்குறியாகியுள்ள நல்லாட்சியும்
அமரர் சோபித தேரரின் வாழ்க்கை முற்றிலும் இலங்கை மக்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டான படிப்பினையாகும் . அனைவரும் அவரின் வாழ்வின் யதார்த்த பூர்வமான சேவைகளை உணர்ந்துகொண்டமையின் விளைவே இன்று இலங்கை வாழ் மக்களை மத வேற்றுமை தாண்டி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நாட்டு மக்கள் ஒவ்வொரு முறையும் அசெளகரியங்களுக்கு உள்ளான போதெல்லாம் தனது தளராத தொணியில் அவற்றிக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
குறிப்பாக கடந்த அரசாங்கம் நாட்டில் நிலைபெற்றிருந்த போது சில அதிதீவிர மதவெறிப்போக்குடைய பெளத்த அமைப்புகளான “பொது பல சேனா”, “ராவண பலய” போன்ற அமைப்புகளால் இலங்கையின் சிறுபான்மை மக்களின் மீது குறிப்பாக முஸ்லிம்களின் மீதும், கிறிஸ்தவர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனமான மத ரீதியான அடக்குமுறைகளின் போதும், பிணக்குகளின் போதும் அவற்றை வன்மையாக கண்டித்து சிறுபான்மையினருக்கு சாதகமாக குரல் கொடுத்தது மட்டுமல்லாமல், அவற்றிற்கு அதிரான பல சட்டரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் என்பது நினைவுகூறத்தக்கத்தும், பாராட்டத்தக்கதுமாகும்.
இன்று நாம் உச்சரிக்கின்ற “நல்லாட்சி” என்ற நாமத்தில் மறைந்த சோபித தேரர் அவர்களின் பங்களிப்பானது அளப்பரிய ஒன்றாகும். மறைந்த சோபித தேரர் அவர்களின் பூரண பங்களிப்போடு இன்று நம் நாட்டில் நிலைபெற்றுள்ள நல்லாட்சிப்பயணமானது அன்னாரின் மறைவின் பின்பு இனி எவ்வாறு நகரப்போகின்றது என்ற பாரிய வினா இன்று இலங்கை மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
காலத்திற்கு காலம் இலங்கையில் சிங்கள மக்களுக்கான தலைவர்கள் உருவாவதென்பது வழமையான ஒன்றே. இதில் குறிப்பாக அநகாரிக தர்மபால (19 ஆம் நூற்றாண்டின் இறுதி – 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்) , எம். மகிந்த தேரர், அரிசென் அஹும்புது போன்ற சிங்கள தலைவர்கள் சிங்கள மக்களின் நலனைப்பற்றி மட்டுமே அக்கறை கொண்டதோடு மட்டுமல்லாமல்,
விஷேடமாக முஸ்லிம் மக்களின் பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி சிங்கள மக்களை தங்களது உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளால் கவர்ந்தனர். இதன் மூலம் பல இனப்பிரச்சினைகள் உருவாகின என்பதை பறைசாற்றி நிற்கின்றது வரலாறு.
ஆனால் மறைந்த கெளரவத்திற்குரிய சோபித தேரர் அவ்வாறன்றி , பெளத்த விழுமியங்களை முற்றிலுமாக கடைப்பிடிக்கும் மதகுருவாகவும், நாட்டு மக்கள் அனைவரும் சமமானவர்கள் என்ற தார்மீக கொள்கையை அடியொற்றியவராகவும், சிறுபான்மை மக்களை மதிப்பவராகவும் காணப்பட்டார். இதனாலேயே நாட்டின் சர்வமத ஐக்கியத்தின் தலைவராகவும் அவர் விளங்கினார்.
இலங்கையை பொருத்தவரை சகல அரசியல் தீர்மானங்களிலும், நடவடிக்கைகளிலும் பெளத்த தலைவர்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்று.
ஆகவே இதன் பிற்பாடு இலங்கையின் நல்லாட்சியின் அரசியல் தலைவர்கள் கடும்போக்குடைய பெளத்த மத தலைவர்களின் கீழ் சோரம் போகாது செவ்வனே இதனை நடை முறைப்படுத்துவார்களா என்பதே இன்றைய இலங்கையர்களின் (நல்லாட்சியை விரும்பும் ), குறிப்பாக சிறுபான்மையினரின் பாரிய வினாவாகும்.
மதப்பிரிவினைகளுக்கு அப்பால் ஓர் உண்மை : நாம் ஒரு பெறுமதிமிக்க ஒரு குரலை இழந்து விட்டோம்.
யாசீர் எம்.அனீபா
(சமூகப்பணி இளமாணி, 3ஆம் வருடம், தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்)