கடன் நெருக்கடி – செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர திட்டம்..!

கடன் நெருக்கடி – செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவர திட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே முக்கிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கனேடிய முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாபருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (IDU) 40ஆவது ஆண்டு விழாவின் போது இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஸ்டீபன் ஹாபர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அமுல்படுத்தப்பட்ட கொள்கை வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில் தமிழ் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைக்க விரும்புவதாக ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை ,புதிய பயங்கரவாத தடைச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் தொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பது குறித்தும் ஜனாதிபதி இங்கு கருத்துத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வரையறுப்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நிலவி வந்த சர்ச்சை நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காணாமற்போனோர் அலுவலக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.