தங்கம் கடத்திய அலிசப்றி தொடர்பான முழு அறிக்கை சுங்கத் துறையிலிருந்து சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது..!
டுபாயிலிருந்து சுமார் எட்டு கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பான முழுமையான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வழங்கியுள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கை சுங்க திணைக்களம் இந்த அறிக்கையை வழங்கியுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு அவரது சார்பில் கருத்துக்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கியிருந்தும் இதுவரை பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.
இது தவிர இது தொடர்பாக அவருக்கு வாட்ஸ் அப் செய்தியும் அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் சுங்க விசாரணையின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 70 இலட்சம் ரூபா தண்டப்பணத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இச்சம்பவத்தினால் பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினை கருத்திற் கொண்டு அலி சப்ரி ரஹீமிற்கு சபை சார்பாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல கட்சி தலைவர்கள் சபாநாயகரிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கடந்த 1ஆம் திகதி உள்ளூர் கடன் மறுசீரமைப்பு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.