அமைச்சர் ராஜிதவுக்கு அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் கண்டனம்

அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் ஒன்றிணைந்து அவன்ட் கார்ட் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

குறித்த சங்கத்தின் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று பிட்டகோட்டே பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது.

இதன் போது கருத்து தெரிவித்த அவன்ட் கார்ட் ஊழியர்கள்,

ஒருசில பல் வைத்தியர்கள் (அமைச்சர் ராஜித சேனாரத்ன) பல் பிடுங்கும் தொழிலின் ஊடாக கப்பல்கள் வரை கொள்வனவு செய்துள்ளார்கள். அவர்களின் வருமானத்தை வைத்துப் பார்க்கும்போது இலங்கையில் இருக்கும் இரண்டு கோடி மக்களின் அத்தனை பற்களை பிடுங்கியிருந்தாலும் இந்தளவு வருமானம் கிடைத்திருக்காது.

அவ்வாறான மோசடியாளர்கள் இந்நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தந்த அவன்ட் கார்ட் நிறுவனம் குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி நிறுவனத்தின் பெயரைக் கெடுப்பதில் முனைந்துள்ளார்கள்.

அவன்ட் கார்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளவர்கள் விடுதலைப் புலிகளுடனான போரின் போது இந்நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டவர்கள். பின்னர் இந்நிறுவனத்துடன் இணைந்து நாட்டுக்கு பெரும் வருமானம் ஈட்டித்தருகின்றனர்.

தற்போது ஒருசில அமைச்சர்களின் செயற்பாடு காரணமாக அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் சிவில் சமூகத்தின் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அதன் ஊழியர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.