பெண் காழி இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பதை நாம் சொல்லும் போது மாட்டிறைச்சி சாப்பிட குர்ஆனில் அனுமதி வந்துள்ளதா என ரவூப் ஹசீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் மூலம் ரவூப் ஹசீருக்கும் அவர் சகோதரர் ரவூப் ஹக்கீமுக்கும் இஸ்லாத்தின் அடிப்படையே தெரியவில்லை என தெரிகிறது.
மாட்டிறைச்சி சாப்பிடலாமா, மான் இறைச்சி சாப்பிடலாமா என்ற அனைத்துக்கும் குர்ஆனும் ஹதீதும் அனுமதி வழங்கியுள்ளன.
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقْنَٰكُمْ وَٱشْكُرُواْ لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
ஈமான் கொண்டவர்களே. நாம் உங்களுக்கு உணவளித்ததில் நல்லவற்றை சாப்பிடுங்கள் என குர்ஆன் கூறுகிறது. அத்தோடு எது நல்லது எது கெட்டது என்பதை குர்ஆன் பல இடங்களில் விளக்குகிறது.
அதே போல் நபி (சல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தமது குடும்பத்தினருக்காக மாட்டை குர்பான் செய்தார்கள் என புகாரியில் ஹதீத் வந்துள்ளது. இதன் மூலம் மாட்டிறைச்சியை சாப்பிட அனுமதி உண்டு என்பதை புரியலாம்.
ஆனாலும் மாட்டிறைச்சிதான் வாழ்க்கை என்றிருக்க கூடாது.
இஸ்லாமிய சட்டங்கள் பற்றி ஆராயும் போது ஒரு விடயம் நபியவர்கள் வாழ்வில் சாத்தியமானதாக இருந்துள்ளதா என்பதை வைத்தே தீர்மானிக்க வேண்டும்.
ஒரு விடயம் இருந்தும் நபியவர்கள் அதனை செய்யவில்லை என்றால் அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதாகும்.
உதாரணமாக நபியவர்கள் காலத்தில் கார், பஸ் என்பன இருந்தும் நபியவர்கள் அதை பாவிக்கவில்லை என்றால் பஸ்சில் போவது கூடாது எனலாம். அவை நபியவர்கள் காலத்தில் இல்லாத போது பஸ்ஸில் போவது ஹராமா ஹலாலா என கேட்க முடியாது.
ஆனால் நபியவர்கள் காலத்தில் பெண்கள் இருந்தார்கள், மார்க்க அறிவில் புலமை வாய்ந்த ஆயிஷா ரழி போன்ற பெண்கள் இருந்தார்கள். ஆனால் நபியவர்கள் எந்தவொரு பெண்ணையும் எந்த பிரதேசத்துக்கும் இமாமாக, காழியாக அனுப்பவும் இல்லை, நியமிக்கவும் இல்லை.
நபிகள் காலத்தில் காழி என்ற தனி அமைப்பு இருக்கவில்லை. இமாமாக, ஆளுனராக நியமிக்கப்படுபவரே காழியாகவும் ஸக்காத்தை வசூல் செய்பவராகவும், முஸ்லிம்களின் மார்க்க விடயங்களையும் பார்ப்பவராக இருப்பார்.
அவ்வாறு நடைமுறையில் இருந்தும் இப்பணிக்காக ஆண்களை மட்டுமே நபிகளார் நியமித்தார்கள்.
எந்தப்பெண்ணையும் இத்தகைய பணிக்காக நியமிக்க சாத்தியம் இருந்தும் நபிகள் நாயகம் நியமிக்கவில்லை என்பதே மிகப்பெரிய ஆதாரமாகவும் குர்ஆனின் உபதேசங்களின்படியுமே நபிகள் செய்தார்கள் என்பதையும் புரியலாம்.
முபாறக் அப்துல் மஜீத்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி.
ஸ்ரீலங்கா ஜம்மிய்யதுல் உலமா.
