முஸ்லிம் தனியார் சட்டம் சுமூக நிலைக்கு வருகிறது: ரவூப் ஹக்கீம் கையொப்பம் இட வேண்டும் என இனாமுல்லாஹ் வேண்டுகோள்..!
பல வருட இழுபறிகளுக்குப் பின்னர் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கிறது.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ முன்வைத்துள்ள சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அவற்றில் மாதர் காழி நீதிபதிகளாக விவாக பதிவாளர்களாக நியமிக்கப்படல் விடயம் தவிர்த்து ஏனைய விடயங்களில் சகலரும் உடன்பாடுகளை கண்டுள்ளனர்!
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் பலவருடங்கள் இது தொடர்பில் ஆராய்ந்து ஸலீம் மர்ஸூஃப் அறிக்கை பாயிஸ் முஸ்தபா அறிக்கை என அறிக்கைகள் வரைக்கும் வந்து இன்று இயன்றவரை இரண்டிலும் உள்ள கருத்தொருமிக்கும் விடயங்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது திருத்த யோசனைகளும் உள்வாங்கி இருப்பதை அவதானிக்கிறேன்!
அதேவேளை அமைச்சர் அலிஸப்ரி தான் தனித்து ஒரு அறிக்கையை தருவதாக தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் பிக்ஹுல் அவ்லவிய்யாத் (முன்னுரிமைப் படுத்தல்) பிக்ஹுல் மஆலாத் (நடைமுறை சார் விளைவுகள்) பிக்ஹுல் அகல்லியாத் (சிறுபான்மை சமூக கரிசனைகள்) என இஜ்திஹாதின் பல பரிமாணங்களை கருத்தில் கொண்டு …
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வைக்க முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் கையொப்பமிடுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹகீமை தனிப்பட்ட முறையில் வேண்டிக் கொள்கிறேன்!
இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹகீம் அவரது நிலைப்பாடுகள் பற்றிய நியாயத் தன்மைகள் குறித்து என்னுடனும் கலந்துரையாடி இருந்தபோதும் பல நடைமுறைச் சிக்கல்கள் சந்தர்ப்ப சூழ்நிலை சார் கரிசனைகள் என்பவற்றையும் (பிக்ஹுல் மகாஸித் வல் மவாஸீன்) நிலைக்களனில் ஆராய்ந்து இந்த வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்!
அமைச்சர் அலி ஸப்ரி அவர்களும் ஒரு முஸ்லிம் சமூக பிரதிநிதியாக புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதே இராஜதந்திரமாக இருக்கும், இன்றேல் நீதி அமைச்சர் முன்வைத்துள்ள சட்டமூலம் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் இன்றி திணிக்கப்பட்டால் அல்லது மேலும் இழுபறி நிலைக்குள் சென்றால் அதற்குரிய பொறுப்பை (யதார்த்தத்தில் அவ்வாறு இல்லாது விடினும்) அவர் மீது மாத்திரம் சுமத்தும் நிலையும் ஏற்படலாம்.
எனது தனிப்பட்ட ஓரிரு அவதானங்களையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கு கொண்டுவர உத்தேசித்துள்ளேன், இன்ஷா அல்லாஹ்.
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்