இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுகிறார் : மறுக்கிறது கிழக்கு ஆளுநர் அலுவலகம்..!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பொய் கூறுவதாக ஆளுநர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தனது முகநூலில், கிழக்கு மாகாண நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்றும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் முஸ்லிம்களை புறக்கணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்தத் தகவல்கள் பொய்யானவை என்று அறிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுர் அலுவலகம் அதற்கான பெயர் விபரங்களையும் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இருமுறை சந்தித்துள்ள இம்ரான் மஹ்ருப், தனது தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கான கோரிக்கைகளையே விடுத்ததாக ஆளுநருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் முஸ்லிம்கள் மீது இவ்வளவு அக்கறைகொண்டிருந்தால், ஆளுநரைச் சந்தித்தபோது, தனது கரிசை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், எனினும், அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் அந்தத் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
தனது தனிப்பட்ட தேவைக்காக ஆளுநரை சந்தித்து, அதனை நிறைவேற்றிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பொதுவெளியிலும், முகநூலிலும் சமூகப் பற்றை வெளிப்படுத்துவதைப் போன்ற பதிவுகளை இட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ, அவரது நேரடி பிரதிநிதியான கிழக்கு மாகாண ஆளுநரோ இனவாத ரீதியாக முன்னெடுக்காத போதிலும், தனது தனிப்பட்ட அரசியலுக்காக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் இவ்வாறு இனவாத ரீதியான கருத்துக்களைப் பொதுவெளியில் பகிர்வது கண்டிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலகத்தின் இந்த செயற்பாடுகளை பகிரங்கமாக கண்டிருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.