வினோதமான குற்றவாளிக்கு ஒத்திவைக்கப் பட்ட சிறை !!

மருத்துவர் தேர்வுக்கான பரீட்சைக் கட்டணத்தை செலுத்தும் நோக்கில் வங்கியில் கொள்ளையடித்த ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 28ம் திகதி பாணந்துறையில் உள்ள தனியார் வங்கியொன்றின் கிளையில் காசாளரை அச்சுறுத்தி ஐந்து லட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. எனினும் கொள்ளைக்காரன் பொலிசாரினால் இடைவழியிலேயே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபரான மொஹமட் ஹசீம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை முடித்துள்ள தான், இலங்கையில் மருத்துவராகத் தேர்வாகும் பரீட்சைக்கான கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் இந்தக் கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக அவர் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவராகும் ஆசை காரணமாகவே தான் குற்றச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கருத்திற் கொண்ட நீதிமன்றம் பத்துவருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பதினெட்டு மாத சிறைத்தண்டனையும் மூவாயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் சமூகத்துக்கு பயனுள்ள மனிதராக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுமாறும் நீதிமன்றம் குற்றவாளிக்கு அறிவுரை வழங்கியுள்ளது.