மருத்துவ கவுன்சில் இடைநீக்கம் செய்த சட்டவைத்திய அதிகாரி ருஹுல் ஹக் மீண்டும் பணியில்! ஹம்தியின் பிரேத அறிக்கையில் ருஹுல் ஹக் தவறு செய்துள்ளாரா??
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் நோயுற்ற சிறுநீரகத்துடன் ஆரோக்கியமான சிறுநீரகத்தையும் அகற்றி உயிரிழந்த குழந்தையின் தடயவியல் பரிசோதனை உட்பட பல சர்ச்சைக்குரிய பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் இனது சேவையினை ஏலவே இலங்கை மருத்துவ சபையானது எட்டு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் உயிரிழந்த ஹம்தி ஃபஸ்லின் என்ற மூன்று வயதுக் குழந்தையின் மரணம் மற்றும் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை வைத்தியர் ரூஹுல் ஹக் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக சுகாதார துரையின் உயர் அதிகாரி ஒருவர் ‘மவ்பிம’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை மருத்துவ சபை வட்டார தகவல்களின்படி, இலங்கையின் மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களுக்கு இணங்க மருத்துவ கவுன்சிலின் நிபுணத்துவ நெறிமுறைக் குழு, இலங்கை மருத்துவ சபையின் பதிவு இலக்கம் 15168 ஐக் கொண்ட வைத்தியர் ருஹுல் ஹக் இனை 2022 டிசம்பர் 20 ஆம் திகதி முதல் எட்டு மாத காலமாக வைத்தியத்துறையில் பணியாற்ற, சம்பளம் உள்ளிட்ட சலுகைகளைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளதோடு, குறித்த இடைநிறுத்தமானது 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து இலங்கை மருத்துவ சபை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கும் தெரியப்படுத்தியுள்ளதுடன், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அவர் எவ்வாறு பணியாற்றியது என்பது குறித்த விடயம் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் இந்த வைத்திய அதிகாரி சம்பளம் பெறுவதற்கு தகுதியற்றவராக இருந்த போதிலும், அவர் இன்னும் சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘மவ்பிம’ விற்கு தகவல் வழங்கிய உயர் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பாக வைத்தியர் ருஹுல் ஹக் வழங்கிய அறிக்கையும், லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த குழந்தை தொடர்பான நீதவான் விசாரணையின் போது வழங்கப்பட்டுள்ள அறிக்கையும் சவாலாக இருப்பதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய தெரிவித்தார்.
இந்த குழந்தையின் மரணம் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியால் வழங்கப்பட்ட அறிக்கையினை மாத்திரம் வைத்து முடிவெடுக்க முடியாது எனவே, இது தொடர்பான அனைத்து மருத்துவப் பதிவுகளையும் வரவழைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.