கந்தானை தீ விபத்தில் ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

கந்தானை தீ விபத்தில் ஒருவர் பலி, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

கந்தானை இரசாயன தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தொழிற்சாலையின் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையின் கணக்காளர் களஞ்சியசாலைக்குள் இருந்ததாகவும், சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கம்பஹா மற்றும் நீர்கொழும்பு தீயணைப்பு பிரிவினர் மற்றும் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தீ பரவலுக்கான காரணம் தெரியவில்லை, கந்தானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் புகையினை சுவாசித்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரண்டு பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.