நேத்ரா அலைவரிசை லைகா மொபைலுக்கு விற்கப்பட்டுள்ளது – NPP
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசுக்குச் சொந்தமான நேத்ரா அலைவரிசையை (Channel Eye) ஜூன் 30 ம் திகதி முதல் ஆறு மாதங்களுக்கு, மாதத்திற்கு ரூ. 250 மில்லியனுக்கு VIS Broadcasting (Pvt.) Ltd நிறுவனத்திற்கு இரகசியமாக விற்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி நேற்று குற்றம் சாட்டியுள்ளது.
நேத்ரா அலைவரிசையின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படைத்தன்மையும் இன்றி விற்கப்பட்டுள்ளதாகவும், ரூபவாஹினி ஊழியர்கள் மற்றும் மக்கள் ஒப்பந்தத்தை எதிர்த்ததை அடுத்து, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நேற்று அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்ததாகவும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“VIS Broadcasting SBT சேனலின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அலைவரிசையினை பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. இந்த அலைவரிசையானது லைகாமொபைலுக்கு (Lycamobile) சொந்தமானது. அமைச்சர் பந்துல குணவர்தனவும் ஜனாதிபதியும் நேத்ரா அலைவரிசையின் உரிமையை ஆறு மாதங்களுக்கு மாற்றி பின்னர் இரண்டு வருடங்களாக நீடிக்க திட்டமிட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.
பரிவர்த்தனை தொடர்பான முழு செயல்முறையையும் ஜூன் 30ஆம் திகதி முடித்து, ஜூலை 1ஆம் திகதி முதல் பரிவர்த்தனை அமுலுக்கு வரும் நிலையில், பரிவர்த்தனையை நியாயப்படுத்த அமைச்சரவைப் பத்திரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு தேசிய மக்கள் சக்தி எதிரானது என்றும், அத்தகைய நடவடிக்கைக்கு எதிராக மக்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.