கனடாவில் தொழில், குடியுரிமை பெற்றுத்தருவதாக  டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் மோசடி செய்த பிக்கு..!

கனடாவில் தொழில், குடியுரிமை பெற்றுத்தருவதாக  டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் மோசடி செய்த பிக்கு..!

– Ismathul Rahuman –

கணடாவில் தொழில்,  குடியுரிமை பெற்றுத்தருவதாக  டாக்டர் உட்பட மூவரை ஏமாற்றி 26.2 மில்லியன் ரூபாவை மோசடியாக பெற்ற சந்தேகநபரான பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

 நீர்கொழும்பு பிராந்திய மோசடி குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற் கிணங்க  நீண்ட விசாரணையின் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் சந்தேக நபருக்கு எதிராக பயணத்தை தடையை பெற்றுக்கொண்டனர். இதன் அடிப்படையில் சந்தேக நபர் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்தபோது கைது செய்யப்பட்டார்.

   பொலிஸார் நடாத்திய விசாரணையில் இவரிடம் இரு கடவுச் சீட்டுகள் இருந்துள்ளன. அவற்றில் இல 49, யுனிட்13, சாலியாபுர வீதி, மொல்லிபதான மற்றும் 944/6, பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்ல என இரண்டு விலாசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கணடாவில் தொழில் பெற்றுதருவதாக கூறி கொச்சிக்கடை பிரதேசத்தில் ஒருவரிடம்   72 இலட்சம் ரூபாவும் மற்றொருவரிடம் 40 இலட்சம் ரூபாவும் காலியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் 15 மில்லியன் ரூபாவும் பெற்றுக்கொண்டு கணடாவுக்கு அனுப்பாமல் ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளன.

 சந்தேகநபரான கோனார முதியன்சலாகே அநுத்தர நிர்வான சூரியபண்டார அல்லது சாலியபுர சந்திம தேரரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

 நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பீ.எம்.ஏ. பண்டாரநாயக்கவின்  ஆலோசனையில் நீர்கொழும்பு பிராந்திய மோசடி புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஆர். முனசிங்கவின் தலைமையில் பொலிஸ் சார்ஜன் மனோஜ் (22661) விசாரணை நடாத்தி சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தி வழக்கை நெறிப்படுத்தினர்.