பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்..!

நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் , அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை என்பதால், அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், பெரும்பாலான இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று சேவையில் இருந்து விலகினாலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள் மற்றும் சிறுநீரக பிரிவுகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பின்போது பயிற்சி நடவடிக்கைகளும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று  மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக  மட்டக்களப்பு  மாவட்டத்திலுள்ளள 14 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும் சுகாதார  சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.

முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் உட்பட சுகாதார பணிகளும் ஸ்தம்பிதமடைந்தன. மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.