தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவுக்கு..!

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவுக்கு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தபால் ஊழியர்கள் ஆரம்பித்த 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (09) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

சுற்றுலா விடுதியொன்றை ஆரம்பிக்கும் போர்வையில் நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் மற்றும் கண்டி தபால் நிலைய கட்டிடம் என்பன விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்கள் நேற்று (08) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.

அத்துடன், நேற்று முதல் 03 நாட்களுக்கு தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்து செய்வதற்கும் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.